ஒருவர் வங்கியில் கணக்கை துவங்கிய நாள் முதலே அந்த வங்கியின் வாடிக்கையாளராகிவிடுகிறார் என்கின்றன சில சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள். ஆனால் ஒரு வாடிக்கையாளர் என அழைக்கப்படுவதற்கு அவர் 'வாடிக்கையாக' அந்த வங்கியில் உள்ள கணக்கில் வரவு-செலவு வைத்திருக்க வேண்டும் என்பதுதான் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட நியதி. ஒருவர் வாடிக்கையாக அதாவது வழக்கமாக (சில காலத்திற்காவது) ஒரு நிறுவனத்துடன் தொடர்பு அல்லது உறவு வைத்திருந்தால்தானே அவர் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் என கருதப்பட முடியும்? அதுபோலத்தான் வங்கி-வாடிக்கையாளர் உறவும் தீர்மானிக்கப்படுகிறது.
அத்தகைய வாடிக்கையாளரின் கணக்கில் அவருக்கு சாதகமான இருப்பு (Credit Balance) இருக்கும்வரையிலும் அவர் அந்த வங்கிக்கு கடன் வழங்கியவராக (Creditor) ஆக கருதப்படுகிறார். அதே கணக்கில் இருப்பு அவருக்கு பாதகமாக அல்லது கடனாக மாறும்போது (Debit Balance) அவர் வங்கியின் கடனாளியாக (Debtor) கருதப்படுகிறார். இப்போது சில குறிப்பிட்ட கணக்குகளில் '0' இருப்பு வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. அதாவது வாடிக்கையாளர் கடன் வழங்கியவராகவும் இல்லாமல் கடனாளியாகவும் இல்லாமல் இருப்பார். இத்தகைய கணக்குகள் பெரும்பாலும் சிறுவர்கள் பெயரில் (குறிப்பாக மாணவர்கள்) மட்டுமே துவங்க அனுமதிக்கப்படுகின்றது.
வங்கி-வாடிக்கையாளர் உறவின் சிறப்பம்சம்
இது மற்ற கடனாளி-கடன் வழங்கியவர் உறவுகள்போல் கருதப்படுவதில்லை. சாதாரணமாக, வங்கியல்லாத தனிநபர் அல்லது நிறுவனங்களிலிருந்து கடன் பெறும் ஒருவர் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தவுடன் கடன் வழங்கியவர் கேட்காமலேயே பணத்தை திருப்பி செலுத்திவிட வேண்டும். 'நீ கேட்கவில்லை ஆகவே நானும் திருப்பி கொடுக்கவில்லை' என்று வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தாமல் இருக்க முடியாது. மேலும் கடனாளி குறிப்பிட்ட காலக்கெடு முடிவடையும் முன்பே தாமாகவே கடனை திருப்பி செலுத்தவும் முன்வரலாம். அப்போது 'நான் கடனை திருப்பி பெற்றுக்கொள்ள மாட்டேன்' என மறுதலிக்க கடன் வழங்கியவருக்கு உரிமையில்லை. கடனை திருப்பி செலுத்த காலக்கெடு ஏதும் குறிப்பிடாத பட்சத்தில் கடன் கொடுத்தவர் கேட்டவுடனே கடனாளி பணத்தை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் வங்கி-வாடிக்கையாளர் உறவில் கடன் பெற்ற வங்கி தாமாகவே முன்வந்து பணத்தை திருப்பி செலுத்தவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. ஏனெனில் சில வைப்பு நிதி கணக்குகளை தவிர மற்ற வங்கி கணக்குகள் அனைத்துமே வரவும் செலவும் (Debit & Credit) செய்யக்கூடிய கணக்குகளே. அதாவது ஒரே கணக்கில் பணம் செலுத்தவோ அல்லது அதிலிருந்து பணத்தை தேவைப்படும்போதெல்லாம் எடுக்கவோ முடிகிறது. தனிநபர்கள் தங்களுடைய ஊதியத்தையோ அல்லது சேமிப்பையோ வங்கிகளில் செலுத்த சேமிப்பு கணக்குகளையும் (Savings Accounts) நிறுவனங்கள் தங்களுடைய தொழில் மற்றும் வணிக வரவு-செலவு பரிவர்த்தனைகளை செய்ய வணிக கணக்குகளும் (Current Accounts) அனுமதிக்கப்படுகின்றனர். ஆகவே வங்கியின் சில சட்டதிட்டங்களுக்குட்பட்டு மட்டுமே இத்தகைய கணக்கிலுள்ள இருப்பிலிருந்து தங்களுக்கு தேவையான தொகையை வாடிக்கையாளர்கள் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய கணக்கிலுள்ள இருப்பிலிருந்து பணத்தை எடுக்க சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே எடுக்க முடியும் என்று கூறினேன்.
அவை என்னென்ன?
1. இடம்: வங்கியின் எந்த கிளையில் அவர் கணக்கு வைத்திருக்கிறாரோ அந்த கிளையிடம் மட்டுமே அவர் தன்னுடைய பணத்தை கோரமுடியும். (இந்த நிபந்தனை தற்போது பல வங்கிகளிலும் நடைமுறையில் இல்லை என்று கூறலாம். ஏனெனில் CBS எனப்படும் மென்பொருள் வழியாக ஒரு வங்கியின் அனைத்து கிளைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஆயினும் அவருக்கு வழங்கப்படும் தொகை அவர் எந்த கிளையில் கணக்கு வைத்திருக்கிறாரோ அந்த கிளையின் (Parent Branch) சார்பாக மட்டுமே அதே வங்கியின் வேறொரு கிளை (Paying Branch) வழங்குகிறது. இதிலும் ஒரு வாடிக்கையாளரால் ஒரு குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே தன்னுடைய கிளை அல்லாது கிளையிலிருந்து எடுக்க முடிகிறது).
2. முறை: வங்கியிலிருந்து வழங்கப்பட்டுள்ள காசோலையை பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும். (இந்த நிபந்தனையும் தற்போது அதாவது ATM இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தளர்த்தப்பட்டுவிட்டது. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே இத்தகைய முறையில் எடுக்க முடிகிறது)
3. தொகை: எடுக்கப்பட வேண்டிய தொகை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் தனக்கு இவ்வளவு தொகை வேண்டும் என தெளிவாக தெரிவிக்க வேண்டும். தோராயாமாக (உ.ம்) 'எவ்வளவு முடியுமோ' அல்லது 'கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறதோ அவ்வளவு' என்றெல்லாம் காசோலையில் குறிப்பிடலாகாது.
4. பணம் பெறும் முறை: காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வாடிக்கையாளர் விரும்பினால் ஒரு குறிப்பிட்ட தொகை வரை 'பேரர்' காசோலையாகவும் ('காசோலை கொண்டு வருபவருக்கு') வழங்கலாம்.
5. நாள்: காசோலை ஒரு குறிப்பிட்ட தியதியிட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது 'நாளைக்கு' அல்லது 'வருகின்ற வாரத்தில் ஒரு நாள்' என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கலாகாது.
தொடரும்..
2 comments:
thankyou thankyou thankyou sir please continue
Thanks for your interest Manohar. I'll be writing on this blog at regular intervals. It'd be a very long serial. I may also bring this out as a book after some time.
Post a Comment