கடந்த சில பதிவுகளில் வங்கி-வாடிக்கையாளர் உறவின் சில பரிமாணங்களைப் பார்த்தோம். இந்த உறவுகளில் மிகவும் அடிப்படையானதும் முக்கியமானதுமான உறவு ஒன்று உள்ளது.
அதுதான் வங்கி தன்னுடைய வாடிக்கையாளருக்கு முகவராக (Agent) செயலாற்ற வழிவகுக்கும் உறவு. கடன் வழங்குபவர்-கடனாளி என்ற உறவிற்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியம் வாய்ந்த உறவு இது. இந்த உறவின் அடிப்படையில்தான் ஒரு வங்கி தன்னிடம் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளருடைய பல தனிப்பட்ட அல்லது வர்த்தக ரீதியான தேவைகளை நிறைவேற்றுகிறது.
இந்த உறவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி வங்கி ஆற்றும் பணிகளில் மிகவும் அடிப்படையான இரண்டு பணிகள்:
1. வாடிக்கையாளருடைய வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய பாக்கிகளை வசூல் (Collect) செய்வது.
2. வாடிக்கையாளருடைய வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டிய தொகையை பட்டுவாடா (Payment) செய்வது.
தனிநபரானாலும் வணிகம் மற்றும் தொழில் செய்பவரானாலும் பரிமாற்றங்கள் (கொடுக்கல்-வாங்கல்) நிச்சயம் இருக்கும். இவை பண்டமாகவோ பணமாகவோ இருக்கலாம். பண்டைய காலத்தில் வழக்கத்தில் இருந்துவந்த பண்டமாற்று முறைக்கு மாற்றாக 'பணம்' என்கிற ஒரு பொதுவான அடிப்படை அளவீடு (Measure) கண்டுபிடிக்கப்படும் வரை வங்கிகளின் முக்கியத்துவத்தை பலரும் உணரவில்லை.
இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பண பரிமாற்றம் என்பது மிக இன்றியமையாததாகிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.
வணிக போக்குவரத்து துறையில் (Commercial Transportation) சமீபகாலங்களில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சி ஒரு நாட்டின் ஒரு கோடியிலிருக்கும் ஒருவர் அதே நாட்டின் மறு கோடியிலுள்ளவருடன் மட்டுமல்லாமல் உலகின் எந்த மூலையிலும் வசிக்கும் ஒருவருடன் வணிக பரிவர்த்தனைகளை (Business transactions) வைத்துக்கொள்ள வகை செய்துள்ளது. இத்தகைய பரிவர்த்தனைகளில் அடிப்படையாக செயல்படுவது பணம்.
வணிக பரிமாற்றங்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கிடையிலிருந்த இடைவெளி (distance) அதிகரிக்க, அதிகரிக்க இத்தகைய பரிமாற்றங்களில் பயன்படுத்தப்பட்ட ரொக்கப் பணத்திற்கும் ஒரு நிகரான மாற்று தேவைப்பட்டது. இன்று அனைவருடைய நாவிலும் மிகவும் சர்வ சாதாரணமாக புரளும் வார்த்தை 'காசோலை' (Cheque). ரொக்கப் பணத்திற்கு மாற்றாக இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் காகித சீட்டு (காசோலை) 1717ம் வருடம் பாங்க் ஆஃப் இங்கிலாந்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக காசோலையின் பயன்பாட்டை குறைக்கும் எண்ணத்துடன் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன என்றாலும் இன்றும் உலக வணிக பரிமாற்றங்களில் கணிசமான அளவு காசோலை வழியாகத்தான் செயல்படுத்தப்படுகிறது.
விற்பவர்-வாங்குபவர் (Seller-Buyer) உறவில் சம்பந்தப்பட்ட இருவர் தங்களுடைய பரிமாற்றங்களின் விளைவாக ஏற்படும் நிலுவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள (settlement of business transactions) மிகவும் உதவியாயிருக்கும் இந்த காசோலைகளை அதை வழங்கியவருடைய (விற்பனையாளர்) கணக்கிலிருந்து வசூல் செய்து பெற்றுக்கொண்டவருடைய (வாங்கியவர்) கணக்கில் வரவு வைக்கும் பணியை ஆற்றக் கூடிய ஒரு இடை நபராக, முகவராக (Mediator/Agent) வங்கிகள் செயல்படுகின்றன.
தொடரும்..
2 comments:
You are writing in a interesting way and that too in pure tamil language. As I am unable to post comment in that purity, I am writing in English.
Please keep up your good work (of course I am very late, to see your blog)
N.Paramasivam
You are writing in a interesting way and that too in pure tamil language. As I am unable to post comment in that purity, I am writing in English.
Please keep up your good work //
Thanks Mr. Paramasivam. I did not continue posting in this blog as there was no appreciable readership in numbers. I'll try to post as and when I get time.
Post a Comment