2. கடன் பத்திரங்கள், பங்குகள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பாதுகாத்தல் (Safe Security Deposit)
இந்த உறவில் வாடிக்கையாளருக்கு சொந்தமான சொத்துக்கள் (பெரும்பாலும் பத்திரங்கள், பங்குகள், ஆவணங்கள்) வங்கியிடம் பாதுகாப்புக்காக அளிக்கபடுகின்றன.
பாதுகாப்பு பெட்டக வசதிகளிலிருந்து இது எந்த வகையில் மாறுபடுகிறது என்ற கேள்வி எழலாம். பாதுகாப்பு பெட்டக வசதி வழங்கப்படும்போது அதில் என்ன வைக்கப்படுகிறது என வங்கிக்கு தெரிவதில்லை. பெட்டகம் மட்டுமே வாடகைக்கு வழங்கப்படுகிறது.
ஆனாக் இந்த டிரஸ்டி (Trustee) உறவில் வாடிக்கையாளர் தன்னுடைய சொத்தின் விவரத்தை அதாவது வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய சொத்தின் பட்டியலை அதற்குறிய படிவத்துடன் (Safe Security Deposits Form) வழங்குகிறார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களுடன் டெப்பாசிட் செய்யப்படும் ஆவணங்களை சரிபார்த்தபிறகே அவற்றை பாதுகாப்புக்காக பெற்றுக்கொண்ட சான்றிதழை வங்கி வழங்குகிறது. பாதுகாப்புக்கென வைக்கப்பட்ட பத்திரங்கள்/ஆவணங்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும், எவ்வாறு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்பவற்றை வாடிக்கையாளர் தன்னுடைய டெப்பாசிட் படிவத்தில் குறிப்பிட்டுள்ளபடி வங்கி கையாளவோ திருப்பிக்கொடுக்கவோ வேண்டும். இந்த உறவில் வங்கி ஒரு பொறுப்புள்ள பாதுகாப்பாளராக (Trustee) செயல்படுகிறார்.
சில சமயங்களில் வாடிக்கையாளர் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ள கடன் பத்திரங்களுக்குண்டான வட்டி அல்லது பங்குகளுக்கான டிவிடெண்ட் தொகை ஆகியவற்றை வசூல் செய்யும் உரிமையையும் வங்கிகளுக்கு வழங்குவதுண்டு. வாடிக்கையாளரின் கோரிக்கைகளுக்கேற்ப சரியான காலக்கெடுவில் (periodicity) வசூல் செய்ய வேண்டிய வட்டி/டிவிடெண்ட் தொகைகளை வசூல் செய்ய வேண்டிய கடமை வங்கிக்கு உண்டு. இந்த செயல்பாட்டில் உண்டாகும் வங்கியின் தவறுகள் வாடிக்கையாளருக்கு ஏதேனும் இழப்பை ஏற்படுத்துமானால் அதை ஈடுகட்ட வேண்டிய கடமையும் வங்கிக்கு உண்டு. இதில் வங்கி வாடிக்கையாளரின் முகவராகவும் (Agent) செயலாற்றுகிறார்.
4. பங்கு வாங்க-விற்க மற்றும் இதர முதலீட்டு ஆலோசனைகள்/முகவர் சேவைகள்
இந்த உறவின் அடிப்படையில் வாடிக்கையாளருடைய சேமிப்பை சந்தையில் விற்பனைக்கு வரும் பங்குகளில் முதலீடு செய்யவும் அவற்றை தேவைப்படும்போதெல்லாம் பணமாக்கவும் வங்கி அவருடைய வாடிக்கையாளரின் முகவராகவும் ஆலோசகராகவும் பாதுகாப்பாளராகவும் செயல்படுகிறார். ஒரே சமயத்தில் பலவிதமான பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியிருப்பதால் இதில் திறன் வாய்ந்த அல்லது அனுபவம் நிறைந்த வங்கிகளே இத்தகைய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.
மேற் கூறிய உறவுகள் அல்லாமல் மிகவும் அடிப்படையான வங்கி-வாடிக்கையாளர் சேவை ஒன்று உள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்குகளில் டெப்பாசிட் செய்யும் காசோலைகளை வசூல் செய்யும் முகவர் சேவை (Agency Service).
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய வணிக, தொழில் தேவைகளுக்காக தன்னுடைய வாடிக்கையாளர்களிடமிருந்தோ அல்லது தன்னிடமிருந்து கடன் வாங்கியவர்களிடமிருந்தோ காசோலைகளை பெறுவது வாடிக்கை. அவர்கள் அனைவருமே வாடிக்கையாளர் செயல்படும் ஊரைச் சார்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்றில்லை. நாட்டின், ஏன் உலகின் பல பகுதிகளிலும் இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் அனைவரும் வாடிக்கையாளருக்கு வழங்கும் காசோலைகளை (இது எந்த வடிவத்திலும் இருக்கலாம் Manager's Cheque, Pay Order, Demand Draft, etc) அவருடைய வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்வதன் மூலம் அவர் வங்கியை தன்னுடைய முகவராக அமர்த்துகிறார்.
ஒரு வங்கிக் கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும் காசோலைகளை பொறுப்புடன் கையாள வேண்டிய கடமை வங்கிக்கு உண்டு. உள்ளூரில் செயல்படும் வங்கி காசோலைகளை சாதாரணமாக அந்த நகரங்களில் செயல்படும் பட்டுவாடா மையங்களுக்கு (Clearing Centre) அனுப்பி வசூல் செய்வது வழக்கம்.
முன்பெல்லாம் வெளியூர்களில் செயல்படும் வங்கி காசோலைகளை அதே ஊரில் செயல்படும் தங்களுடைய கிளைகளுக்கோ அல்லது தங்களுடைய முகவர்களாக செயல்படும் வேறொரு வங்கிகளுக்கோ அனுப்பி வசூல் செய்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக நாட்டின் முக்கிய பெருநகரங்களில் செயல்படும் வங்கி கிளைகளுக்கும் பொதுவாக பட்டுவாடா மையங்கள் (National Clearing Centre) செயல்படுகின்றன. இதனால் வசூலாக தேவைப்படும் நாட்கள் வெகுவாக குறைந்துள்ளன.
இத்தகைய பொது மையங்கள் இன்னும் செயல்பட துவங்காத இடங்களுக்கு அதே இடத்தில் செயல்படும் வேறொரு வங்கிக்கு காசோலைகள் அனுப்பப்பட்டு வசூல் செய்யப்படுகின்றன. ஒரு வங்கி வழங்கிய காசோலையை ஏன் வேறொரு வங்கிக்கு வசூலுக்காக அனுப்பபடுகிறது என்ற கேள்வி எழலாம். இது ஒரு தற்காப்புக்காகத்தான். ஒரு குறிப்பிட்ட வங்கியுடைய காசோலையை அதே வங்கிக்கு வசூல் செய்ய அனுப்பினால் வாடிக்கையாளரின் கணக்கில் போதிய தொகை இல்லையென வைத்துக்கொள்வோம். அவர் அதை உடனே திருப்பியனுப்பாமல் வாடிக்கையாளர் பணத்தை செலுத்தும் வரை காத்திருக்கக் கூடும். இதனால் வாடிக்கையாளரின் நேரம் விரையமாகக் கூடும். ஆனால் அந்த காசோலையை அதே ஊரிலுள்ள வேறொரு வங்கிக்கு அனுப்பினால் அது அந்த ஊரில் செயல்படும் பட்டுவாடா மையத்திற்குத்தான் அந்த காசோலையை வசூலுக்கு அனுப்புவார். அப்போது கணக்கில் பணம் இல்லாத சூழலில் உடனே வசூல் மையத்திற்கு திருப்பியனுப்பியாக வேண்டும். இத்தகைய முறையில் வசூல் செய்து தரும் வங்கிக்கும் சிறிது கட்டணம் செலுத்த வேண்டியிருந்தாலும் இதுவே பாதுகாப்பான முறை.
தொடரும்..
No comments:
Post a Comment