தனிநபர் ஒருவரின் சேமிப்பின் நோக்கம் எதுவாக இருப்பினும் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கு அது மிகவும் அவசியம். தனிநபர் சேமிப்பு சம்பந்தப்பட்ட நபரின் குணாதிசயங்களைப் சார்ந்தே அமைகிறது என்கின்றார் உளவியல் ஆய்வாளர் லாரி பாவ்லிக்.
சேமிப்பாளர்களை பலவிதமாக வகைப்படுத்தலாம் என்கிறார் அவர்.
1. பதுக்கல்காரர்கள் (Money Hoarders)
பொருட்களை பதுக்குபவர்களைப் போல் அல்ல இத்தகையோர். சந்தையில் மிகவும் அத்தியாவசியமான பொருட்களை பதுக்குவோர் அதை பிறகு அதிக லாபத்திற்கு விற்பதற்காகவே பதுக்குவர். ஆனால் பணத்தை முடக்குவோர் முதலீடு செய்தால் எங்கே அதை இழந்துவிடுவோமோ என்கிற அச்சத்தில் வங்கிகளிலோ அல்லது மற்ற பாதுகாப்பான நிதி நிறுவனங்களிலோ வைப்பு நிதிகளில் முதலீடு செய்வார்கள்.
ஆனால் இவர்கள் பெரும்பாலும் தேவையற்ற, பகட்டான சிலவுகளை தவிர்த்து மிகவும் கவனத்துடன் பணத்தை சேர்ப்பவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையோர் அதிக செல்வந்தர்களாகவும் இருக்க காரணம் இத்தகைய திட்டமிட்ட சேமிப்புதான் என்றாலும் மிகையாகாது.
சேமித்த பணத்தை வங்கிகளில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டி தொகையை அனுபவிப்பதுதான் இவர்களுடைய நோக்கம். ஆகவே இவர்களுடைய சேமிப்பு பலமடங்காக அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லை.
2. சாதனையாளர்கள் (Achievers & Wealth accumulators)
இத்தகையோர் நன்றாக படித்தவர்களாகவே இருப்பார்கள். நல்ல உத்தியோகம் அல்லது தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள். மிகவும் கவனத்துடன் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்கள். அதாவது தங்களுடைய வாழ்க்கையை பாதையை தெளிவுடன் தெரிவு செய்துக்கொள்வதுடன் அதில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படுபவர்கள். அதுபோன்றே ஈட்டும் பணத்தையும் திட்டமிட்டு செலவிட்டு மீதமுள்ளவற்றை அதிக லாபமளிக்கும் முதலீடுகளில் முடக்கி வெற்றியும் காண்பவர்கள். கிடைத்த லாபத்தை வீடு, மனை, வாகனம் ஆகியவற்றில் முதலீடு செய்து வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவர்களாகவே இருப்பார்கள். சுருக்கமாக கூறவேண்டுமென்றால் சேமிப்பது மட்டுமல்லாமல் அதை அனுபவிக்கவும் செய்பவர்கள்.
3. வணிகர்கள், தொழிலதிபர்கள் (Entrepreneurs
இத்தகையோர்தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனப்படுபவர்கள். தனிநபர் சேமிப்புகள் நாட்டின் முதலீடாக மாறும் வித்தை இத்தகையோரால்தான் நடைபெறுகிறது என்றால் தவறில்லை. முதலீட்டை பெருக்கும் நோக்கத்துடன் எவ்வித தடங்கல்களையும் சந்திக்க தயங்காதவர்கள். தங்களுடைய முதலீட்டையே இழந்துவிடக்கூடிய அபாயத்தையும் சாதுரியத்துடன் எதிர்கொண்டு வெற்றிபெறக் கூடியவர்கள் இவர்கள். ஆனால் சில சமயங்களில் இவர்களுடைய தவறான முடிவுகளால் அல்லது ஒருசிலரது அதீத ஆசையால் நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்துவிடவும் வாய்ப்புண்டு என்பதும் மறுக்கவியலாத உண்மை!
4. சுகவாசிகள் (Easy go lucky)
நன்றாக சம்பாதிப்பது நன்றாக அனுபவிப்பது. இதுதான் இத்தகையோரின் வாழ்க்கைமுறையாக இருக்கும். அன்றைய பொழுதிற்கு வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள். சேமிப்பு என்பதே இவர்களுடைய அகராதியில் இருக்காது. இத்தகையோரும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்கிறார் ஆய்வாளர். ஏனெனில் ஒரு நாட்டின் அனைத்து குடிமகன்களும் சேமிப்பவர்களாகவே இருந்துவிட்டால் அதாவது ஈட்டிய பணத்தை செலவு செய்வதில் நாட்டமில்லாதவர்களாக இருந்துவிட்டால் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் எதுவும் விற்பனையாகாதல்லவா? ஆகவே ஒரு பொருளாதார சந்தையில் சேமிப்பவர்கள் இருப்பதுபோலவே செலவு செய்பவர்களும் இருக்கத்தான் வேண்டும்.
5. பொருளாதார சூதாடிகள் (Financial Risk Takers)
இவர்கள் சம்பாதிப்பதை பண்மடங்கு பெருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்ய தயங்காதவர்கள். இவர்களுடைய நோக்கம் லாபம், லாபம், லாபம் மட்டுமே. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் எண்ணத்துடன் எந்த பாதையிலும் செல்ல தயங்காதவர்கள். வெற்றி கிடைத்தால் வெற்றி இல்லையென்றால் திவால்! இதுதான் இவர்களுடைய அணுகுமுறையாக இருக்கும்.
ஆனால் இத்தகையோர் சிலருடைய வெற்றி ஒரு நாட்டின் தலை எழுத்தையே மாற்றிவிடக் கூடியது. நமது நாட்டில் ஒருகாலத்தில் பொருளாதார அடிமட்டத்தில் இருந்தவர்கள் இன்று நாட்டின் விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்களாக உள்ளனர்!
ஆனால் மேற் கூறியவர்கள் அனைவருமே ஒருநாட்டின் பொருளாதார வளர்சிக்கு பயன்படுகிறார்கள் என்பதும் உண்மை.
தொடரும்..
No comments:
Post a Comment