வங்கி-வாடிக்கையாளர் உறவு வாடிக்கையாளரின் சேமிப்பை இட்டு வைக்கவும் கடன் பெறவும் என்கிற உறவுடன் நின்றுவிடுவதில்லை.
இந்த அடிப்படை உறவைக் கடந்து இன்று முப்பது வருடங்களுக்கு முன்பு கனவிலும் நினைத்துப் பார்த்திராத சேவைகளை இன்று பல வங்கிகளும் வழங்குகின்றன. அன்று, அதாவது எண்பதுகளில், பல வங்கிகளில் தங்களுடைய பாதுகாப்பு பெட்டக வசதியை விளம்பரப்படுத்தி தாங்கள் வழங்கிய வங்கி சேவைகள் மற்ற வங்கிகளைக் காட்டிலும் பிரத்தியேகமானவை என தம்பட்டம் அடித்துக்கொண்டன.
ஆனால் இன்று இதுதான் இல்லை என ஒரு வாடிக்கையாளரின் அனைத்து தேவைகளையும் சேவையாக வழங்குகின்றன என்றால் மிகையாகாது.
அவற்றில் சில முக்கியமானவற்றை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.
1. பாதுகாப்பு பெட்டகங்கள்.
2. கடன் பத்திரங்கள், பங்குகள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பாதுகாத்து வைத்தல்,
2. பங்கு வாங்க-விற்க வசதி.
3. பங்குகளில், பிற சொத்துகளில் முதலீடு செய்ய ஆலோசனை.
4. ஏஜன்சி வசதிகள் (அனைத்து பயண சீட்டுகளையும் பெற்று தருதல், விடுதி, போக்குவரத்து ஏற்பாடுகள், காப்பீட்டு தவணை தொகையை குறிப்பிட்ட தியதிகளில் செலுத்துதல், என பல சேவைகள்)
5. வீடு, வாகனங்கள் வாங்க கடனுடன் சேர்த்து ஆலோசனைகள்
6. அன்னிய செலவாணி விற்க-வாங்க
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இத்தகைய உறவுகள் ஒவ்வொன்றுக்கும் பிரத்தியேக நிபந்தனைகள் (Conditions), கடமைகள்(Responsibilities), உரிமைகள் (Rights) உள்ளன.
அவை சேமிப்பு அல்லது கடன் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் வங்கியுடன் வைத்துள்ள Debtor-Creditor உறவிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.
1. பாதுகாப்பு பெட்டகங்கள் வசதி
இந்த சேவையில் பாதுகாப்பு பெட்டகங்கள் (Safe Deposit Lockers) வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாடகையாக மட்டுமே வழங்கப் படுகின்றன. அதாவது ஒரு வீட்டு உரிமையாளர்-வாடகைதாரர் ஆகியவர்களுக்கு இடையில் என்ன உறவை சட்டம் ஏற்படுத்துகிறதோ அதுபோன்ற உறவு இது. ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும் வாடகைதாரர் அந்த வீட்டை தனியாகவோ தன்னுடைய குடும்பத்தினருடனோ வசிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தலாம் என்றும் எந்த ஒரு சூழலிலும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்காக தன்னுடைய வீட்டை பயன்படுத்தலாகாது என வீட்டு உரிமையாளர் நிபந்தனை விதித்திருந்தால் அந்த பயனுக்காக மட்டுமே வாடகைதாரர் வீட்டை பயன்படுத்த முடியும் அல்லவா? அதுபோலத்தான் இத்தகைய வங்கி-வாடிக்கையாளர் உறவும். வாடிக்கையாளர் வாடகைக்கு எடுத்துள்ள பெட்டகத்தை சட்டத்துக்கு புறம்பான எந்த தேவைக்காகவும் பயன்படுத்தலாகாது.
மேலும் வாடகை வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரரின் பொருட்களுக்கு எப்படி வீட்டு உரிமையாளர் பொறுப்பாக மாட்டாரோ அதுபோன்றே வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும் எந்த பொருளுக்கும் வங்கி பொறுப்பாகாது. ஏனெனில் வாடகைதாரர் எந்த பொருளை பெட்டகத்தில் வைக்கிறார் என்பதை வங்கிக்கு தெரிவிப்பதில்லையே. அப்படியே அவர் தெரிவித்தாலும் அதை கருத்தில் கொள்ள வேண்டிய தேவை வங்கிக்கு இல்லை. ஆகவே பெட்டகத்தில் வைக்கப்பட்ட பொருள் சேதமடைந்தாலோ, களவு போனாலோ அதற்கு எந்த விதத்திலும் வங்கி பொறுப்பாகாது.
வாடகைக் காலம் முடிந்ததும் மீண்டும் வீட்டை அதே வாடகைதாரருக்கு வாடகைக்கு விடவேண்டும் என்கிற நிர்பந்தம் வீட்டு உரிமையாளருக்கு இல்லையல்லவா? அதுபோன்றே வாடகைக்கு விட்ட பெட்டகத்தை வருடா வருடம் புதுப்பிக்க வேண்டும் என்கிற கட்டாயம் வங்கிகளுக்கு இல்லை. தேவைப்பட்டால் அதை காலி செய்ய கூறும் உரிமையும் வங்கிகளுக்கு உண்டு.
இந்த உறவிலுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு உள்ள கடமைகள் என்னென்ன?
வங்கி
1. பாதுகாப்பு பெட்டகம் அடங்கிய இரும்பு அலமாரியை (Iron Safe) சரிவர பராமரிப்பது. வங்கியின் சரியான பராமரிப்பின்மையால் பெட்டகத்தினுள் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சேதமடையும் பட்சத்தில் வாடகைதாரருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வேண்டும் அதாவது லாக்கருக்குள் உள்ள ஈரப்பதம் காரணமாக பெட்டகத்தில் வைக்கப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் கரையான் அரிப்பால் சேதப்பட்டுவிட்டது என்பது நிரூபிக்கப்படுமானால் வங்கி இழப்பை ஈடு செய்ய வேண்டும்.
2. பாதுகாப்பு பெட்டகத்தை வாடகைதாரர் சிரமமில்லாமல் பயன்படுத்த தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். இன்று பல வங்கிகளும் இவற்றை தனி அறைகளில் அமைப்பதுடன் வாடகைதாரர்கள் அமர்ந்து பெட்டகத்திலுள்ள பொருட்களை எடுத்து சரிபார்க்க ஏதுவாக பிரத்தியேக மேசை, நாற்காலி, மின் விசிறி, குளிர்சாதன வசதிகள் ஆகியவற்றை செய்துக்கொடுத்துள்ளன.
வாடிக்கையாளர்
1. பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுகோல், கடவுச்சொல் (password) ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அவை களவுபோகும் பட்சத்தில் வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். (பெட்டகத்தின் திறவுகோல் வாடகைதாரர் தவறவிடும் பட்சத்தில் புதிய திறவுகோலை வங்கி ஏற்பாடு செய்ய தேவையான அனைத்து சிலவினங்களையும் வாடகைதாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும்)
2. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுதல்.
உரிமைகள்
வங்கி
1. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்படாத தேவைகளுக்காக பெட்டகம் பயன்படுத்தப்படும் பட்சத்தில் அதை உடனடியாக காலி செய்ய கூற முடியும்.
2. வாடகைதாரரின் வரி நிலுவைகளுக்காகவோ அல்லது அரசாங்க இலாக்காக்கள் சட்டத்தை அமுல்படுத்தவோ அவருடைய பெட்டகத்தை அவருடைய விருப்பத்துடனோ அல்லது இல்லாமலோ திறக்க உரிமையுண்டு. ஆனால் திறக்கப்படுவதற்கு முன்போ அல்லது அதற்குப் பிறகோ சம்பந்தப்பட்ட வாடகைதாரருக்கு அதை தெரியப்படுத்துவது வங்கியின் கடமையாகும்.
3. பெட்டகத்திற்குறிய வாடகை நிலுவையில் நிற்கும் பட்சத்தில் அதை வசூலிக்க பெட்டகத்தை வாடகைதாரருக்கு தெரிவித்துவிட்டு திறக்கும் உரிமை வங்கிக்கு உண்டு.
வாடகைதாரர்
1. ஒப்பந்தத்திலுள்ள நிபந்தனைகளை மீறாதிருக்கும் பட்சத்தில் பெட்டகத்தை தன்னுடைய எத்தகைய தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள உரிமையுண்டு.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களும் சில உள்ளன.
1. பெட்டகத்தில் வைக்கப்படும் பொருட்கள் எதன் மீதும் வங்கிக்கு எவ்வித உரிமையும் இல்லை. அதாவது வாடகைதாரரின் கடன் கணக்கு நிலுவையில் நிற்கும் பட்சத்தில் அதை வசூலிக்க பெட்டகத்திலுள்ள அவருடைய சொத்துக்களை முடக்கி வைக்கவோ அல்லது அவற்றின் மீது உரிமை கொள்ளவோ வங்கிக்கு உரிமையில்லை.
2. பெட்டக பராமரிப்பில் வங்கியின் செயல்பாடுகளில் குறை இல்லாத பட்சத்தில் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சேதமடைந்துவிட்டன அல்லது களவு போய்விட்டன என்று கூறி அதற்கு இழப்பீடு ஏதும் கோரும் உரிமை வாடகைதாரருக்கு இல்லை.
தொடரும்..
1 comment:
Thanks Ramji. Please continue to read this blog. It'd be useful and informative for all those who are using the bank services.
Post a Comment