முந்தைய இரண்டு பதிவுகளில் வங்கி என்றால் என்ன என்றும் சேமிப்பு என்றால் என்ன என்றும் சுருக்கமாக கூறியிருந்தேன்.
ஒரு வங்கியின் வாடிக்கையாளர்களுள் முக்கியமானவர்கள் சேமிப்பாளர்கள். இவர்களுள் எத்தனை வகை, இவர்களுடைய குணாதிசயங்களுக்கும் இவர்களுடைய சேமிப்பு முறைகளும் எத்தகையவை என்றும் கூறினேன்.
இந்த பதிவில் சேமிப்பாளர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையில் என்ன உறவு என்பதைப் பற்றி சுருக்கமாக கூறுகிறேன்.
ஒரு வங்கியின் கிளைக்குள் வந்து செல்லும் அனைவரையுமே வங்கியின் வாடிக்கையாளராக கருத முடியுமா?
அதற்கு முன்பு ஒருவர் எதற்காகவெல்லாம் வங்கிக்கு வந்து செல்கின்றார் என்று பார்ப்போம்.
1. தன்னுடைய சேமிப்பை பாதுகாத்து வைப்பதற்கு வங்கியில் ஒரு கணக்கை துவங்க அல்லது ஏற்கனவே துவங்கியுள்ள கணக்கில் மேலும் பணத்தை செலுத்த, அல்லது அதிலிருந்து தேவையான பணத்தை எடுக்க, அல்லது கணக்கை முடித்துக்கொள்ள.
2. வங்கியிலிருந்து தனக்கு தேவையான பணத்தை கடனாக பெற (இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதை பிறகு விவரமாக பார்ப்போம்)
3. வங்கியிலிருந்து பண ஓலைகளை வாங்க அல்லது மாற்றுவதற்கு (அது டிமாண்ட் ட்ராஃப்டாக இருக்கலாம், மேலாளர் காசோலை எனப்படும் Banker's Cheque அல்லது Pay Order ஆக இருக்கலாம்)
4. வெளியூரிலுள்ள தன்னுடைய வாடிக்கையாளர், நண்பர், உறவினர் ஆகியோருக்கு தந்தி மூலம் பணம் அனுப்புவதற்கு
5. வங்கியில் பாதுகாப்பு பெட்டகம் ஒன்றை வாடகைக்கு எடுக்க என
இப்படி பல காரணங்களுக்காக இருக்கலாம்.
இப்போதெல்லாம் பங்குகள் வாங்க, விற்க, முதலீடு செய்வதற்கு தேவையான ஆலோசனைகள் பெற என ஒரு வங்கியால் வழங்கப்படாத சேவைகளே இல்லை எனலாம்.
இவர்கள் அனைவருமே வாடிக்கையாளர் என கருதப்படுகிறார்களா?
உலகப் புகழ் பெற்ற சர் ஜான் பேஜட் இவ்வாறு கூறுகிறார். 'ஒருவர் வாடிக்கையாளர் என அழைக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட வங்கியில் அவர் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்காகிலும் அடிப்படை பரிவர்த்தனைகள் (Basic banking transactions) செய்திருக்க வேண்டும். சுருக்கமாக கூறினால் அவர் குறிப்பிட்ட கால அளவுக்கு ஒரு சேமிப்பு கணக்காகிலும் வைத்திருக்க வேண்டும்.
அதாவது ஒருவர் வெறும் பண ஓலைகளை வாங்கவோ அல்லது தந்தி மூலம் பணம் செலுத்தவோ, பெறவோ ஒரு வங்கிக்கு சென்று வந்தால் மட்டுமே அவர் அந்த வங்கியின் வாடிக்கையாளர் என கருதப்படுவதில்லை.
'குறிப்பிட்ட கால அளவு' என்பது எத்தனை நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் என்பது இதுவரை எந்த சட்டத்தாலும் வரையறுக்கப்படவில்லை. அது வங்கி-வாடிக்கையாளர் உறவில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக வழக்காடு மன்றங்களை அணுகும் சமயங்களில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.
இதற்கு மாறான கருத்துகளையும் சமீப காலங்களில் பல வழக்காடு மன்றங்கள், 'ஒருவர் வங்கியில் கணக்கு வைத்திருந்தாலே போதும் அவர் அதனுடைய வாடிக்கையாளராகிவிடுகிறார். அவர் இத்தனை காலம் அந்த கணக்கில் பண பரிவர்த்தனைகள் செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.'வழங்கியுள்ளன என்பதும் உண்மை.
அதுபோன்றே ஒரு வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் கணக்கோ அல்லது வேறு ஏதாவது பரிவர்த்தனைகளை தொடர்ந்து செய்து வந்திருந்தாலே போதும், அவர் அந்த வங்கியின் வாடிக்கையாளர் என கருதப்படுகிறார்.
ஒரு வங்கியின் வாடிக்கையாளர் என கருதப்படுவதற்கு அதன் கிளைகளுள் ஒன்றில் ஒரு கணக்கு வைத்திருந்தாலே போதும் என்பது உண்மைதான் என்றாலும் ஒரு கணக்கை துவக்கிவிட்டு மாதக் கணக்காக அதில் பரிவர்த்தனைகள் ஏதும் செய்யாதிருக்கும் ஒருவர் வாடிக்கையாளர் என கருதப்படுவதில்லை என்றும் கூறலாம். அதாவது ஒருவர் கணக்கு துவங்கும்போது அதில் பரிவர்த்தனைகள் தொடர்ந்து செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறார் என்று பொருள்.
ஒருவர் வங்கியில் எவ்வித கணக்கும் இல்லாமலும் பண ஓலைகளை பெறவோ அல்லது தந்தி மூலமாக பணத்தை வங்கியின் வேறு கிளைகளுக்கு அனுப்பவோ முடியும். ஆனால் இதற்கென அவர் வங்கிக்கு எத்தனை முறை சென்று வந்திருந்தாலும் அவர் வாடிக்கையாளராகிவிட மாட்டார். ஏனெனில் இத்தகைய பரிவர்த்தனைகள் வங்கியின் அடிப்படை பண பரிவர்த்தனைகளாக கருதப்படுவதில்லை.
ஆக ஒருவர் ஒரு வங்கியின் வாடிக்கையாளராக கருதப்பட அவர் அந்த வங்கியில் ஒரு கணக்கு வைத்திருப்பதுடன் அடிப்படை பண பரிவர்த்தனைகள் எனப்படும் வரவு-செலவு வைத்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளர் தனிநபராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அது பல கூட்டாளிகளைக் கொண்ட கூட்டு நிறுவனமாகவோ (Partnership), பல பங்குதாரர்களைக் கொண்ட பொது அல்லது தனியார் நிறுவனமாகவோ (Private or Public Limited Companies - listed or unlisted), தொண்டு நிறுவனமாகவோ (Public Trusts), விளையாட்டு சங்கமாகவோ (Club, Societies,Associations,etc) ஏன் அரசாங்க இலாக்காக்களாகவோ கூட இருக்கலாம்.
வங்கி-வாடிக்கையாளர் உறவு
வங்கி-வாடிக்கையாளர் உறவுகள் பலவிதம்.
1. கடன் பெறுபவர்-வழங்குபவர் உறவு (Debtor-Creditor). வாடிக்கையாளர் வங்கியில் வைத்திருக்கும் கணக்கைப் பொருத்து இந்த உறவு அமைகிறது. ஒரே வாடிக்கையாளர் வங்கிக்கு கடன் வழங்குபவராகவும் வங்கியிலிருந்து கடன் பெறுபவராகவும் இருக்க வாய்ப்புண்டு.
அதாவது சேமிப்பு (Savings or Current accounts) அல்லது வைப்பு நிதி (Fixed Deposit Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர் வங்கிக்கு கடன் வழங்குபவராகவும் (Creditor) குறுகிய கால கடன் (Loans whether short term or long term) அல்லது ஓவர்டிராஃப்ட் கணக்கு (Overdraft) வைத்திருக்கும் வாடிக்கையாளர் வங்கியிலிருந்து கடன் பெறுபவராகவும் (Debtor) கருதப்படுகிறார்.
இதுதான் வங்கி-வாடிக்கையாளர் உறவுகளில் அடிப்படை உறவாக கருதப்படுகிறது.
தொடரும்..
8 comments:
very nice .please continue i like to know more about banks
அருமையான பதிவு.
இணைய வங்கி வந்த பிறகு நான் வநிக்கிக்கு நேரிடையாக செல்வதையே தவிர்த்து விட்டேன்.
Welcome Deepan,
Continue to read this blog. I'll be covering almost all areas of Banking.
வாங்க ராம்ஜி,
இணைய வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம். ஆனால் மேலை நாடுகளைப் போன்று அனைத்து வங்கி சேவைகளையும் இணைய வங்கியிலேயே பெற்ற்க்கொள்ளும் வகையில் நம் நாட்டிலும் வர வேண்டும்.
அய்யா டிபிஆர்,
இதைவிட மிகவும் எளிமையான
முறையில் வங்கியின் சேவையை
எழுத முடியாது.
ஆனால் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில்
நான் செல்லும் போதெல்லாம் சண்டையுடன்
தான் திரும்புகிறேன்.
குறிப்பாக டி.டி எடுக்க 15 நிமிடம் தான் என
வங்கியின் விளம்பர அட்டை சொல்லும்.ஆனால்
ஒரு மணி நேரம் காக்க வைத்துவிடுவர்.
உரிமையை எடுத்து 'உரக்கப்' பேசினால் தான்
பணி செய்கின்றனர்.
வங்கிப் பணியின் அடிப்படை 'மக்கள் சேவை"
என்பதை வங்கி பணியாளர்கள் என்று உணருவார்களோ?
வாங்க வண்ணத்துப்பூச்சி,
இதைவிட மிகவும் எளிமையான
முறையில் வங்கியின் சேவையை
எழுத முடியாது.//
நன்றி. இதுதான் என்னுடைய நோக்கமும்.
வங்கிப் பணியின் அடிப்படை 'மக்கள் சேவை"
என்பதை வங்கி பணியாளர்கள் என்று உணருவார்களோ? //
உங்களுடைய ஆதங்கம் நியாயமானதுதான். இன்று பல புதிய தலைமுறை வங்கிகள் வாடிக்கையாளரின் வாசலுக்கே வந்து சேவைகளை வழங்குகின்றன. ஆயினும் பல பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் மனநிலை மாறவே இல்லை.
ஒருவர் வங்கியில் எவ்வித கணக்கும் இல்லாமலும் பண ஓலைகளை பெறவோ அல்லது தந்தி மூலமாக பணத்தை வங்கியின் வேறு கிளைகளுக்கு அனுப்பவோ முடியும். ஆனால் இதற்கென அவர் வங்கிக்கு எத்தனை முறை சென்று வந்திருந்தாலும் அவர் வாடிக்கையாளராகிவிட மாட்டார்.
இப்போது இக்கோட்பாடு இல்லை. வங்கிக்கு வருபவர் அனைவரும் ஒரு விதத்தில் வாடிக்கையாளர் தான். வங்கி பயன் அடைகிறது.
இது இந்தியன் வங்கியின் கோட்பாடு.
மற்றபடி தங்கள் பதிவு நன்றாக உள்ளது. நான் தொடர்ந்து படிக்க உள்ளேன்.
N.Paramasivam
இப்போது இக்கோட்பாடு இல்லை. வங்கிக்கு வருபவர் அனைவரும் ஒரு விதத்தில் வாடிக்கையாளர் தான். வங்கி பயன் அடைகிறது.//
நான் சொல்ல வந்தது என்னவென்றால் நிரந்தர கணக்கு வைத்திருக்கும் ஒருவரும் அவ்வப்போது பண ஓலைகளை பெற வருபவரும் ஒரே தரத்திலான வாடிக்கையாளர்கள் என கூறிவிட முடியாது என்றுதான். மற்றபடி வங்கியில் பரிவர்த்தனை செய்யும் அனைவருமே ஒருவகையில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்தான்.
நான் தொடர்ந்து படிக்க உள்ளேன்.//
மிக்க நன்றி. நானும் தொடர்ந்து எழுத முயல்கிறேன்.
Post a Comment