Thursday, March 1, 2012

வங்கிக் கொள்ளை - வங்கிகளின் பாதுகாப்பின்மை


இந்தியாவில் கடந்த கால் நூற்றாண்டில் ஏதாவதொரு துறை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அது வங்கித்துறைதான் என்றால் மிகையாகாது.

அஞ்சல் அலுவலகங்களுக்கு அடுத்தபடியாக இன்று நாடெங்கும் பரந்து விரிந்து பரவியுள்ளது வங்கித்துறை. மூவாயிரம் கிளைகளுக்கு குறைவாக உள்ள பொதுத்துறை வங்கியே இல்லை எனவும் கூறலாம். நாளொன்றுக்கு பல லட்சம், ஏன் கோடி என்றும் கூறலாம், வாடிக்கையாளர்களுடைய அன்றாட வர்த்தக தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டிருக்கும் வங்த்துறையில் சமீப காலமாக மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை (improved customer service) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல வசதிகள் வங்கிகளின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளன.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகளில் கவுண்டர் மேசையின் (counter top) உயரம் சுமார் நான்கிலிருந்து ஐந்தடி வரை இருக்கும். சராசரி உயரமுள்ள வாடிக்கையாளர் சற்று எம்பி பார்த்தால்தான் மறுபுறத்தில் அமர்ந்திருக்கும் குமாஸ்தாவின் தலை தெரியும். காசாளர் அமர்ந்திருக்கும் அறையோ கம்பி வலைகளால் நாலாப்புறமும் மறைக்கப்பட்டிருப்பதுடன் மேற்கூரையும் அமைந்திருக்கும். காசாளர் அறைக்குள் அமர்ந்திருக்கும்போது கதவை பூட்டிக்கொண்டுதான் இருக்க வேண்டும். அவருடைய அனுமதி இல்லாமல் கிளை மேலாளர் கூட அவருடைய அறைக்குள் நுழைந்துவிட முடியாது. காசாளருடைய காலடியிலேயே பர்க்ளர் அலாரத்தை (burglar alarm)  ஒலிக்கச் செய்ய உதவும் ஸ்விட்சும் பொருத்தப்பட்டிருக்கும். அசம்பாவிதமாக ஏதும் நடைபெறும் பட்சத்தில் ஒலிக்கச் செய்யப்படும் இந்த அலாரத்தின் ஒலி சுட்டுவட்டாரத்தையே கலக்கும் அளவுக்கு இருக்கும் என்பதால் வங்கியிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல் சுமார் நூறடி சுற்றளவிலுள்ள அனைவரையும் இது எச்சரித்துவிடக் கூடியதென்பதால் இதை அனைத்து வங்கி காசாளர் அறையிலும் பொருத்த வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு விதிகளில் ஒன்றாக இருந்தது. மேலும்  கிளைகளின் வாயிலில் இருபுறமிருந்தும் அடைக்க வசதியாக இரும்பிலான அடுக்கு கதவுகள் (collapsible gate) பொருத்தப்பட்டதுடன் இரு பாதி கதவுகளுக்கும் இடையில் ஒருவருக்கு மேல் நுழைய முடியாத முறையில் இரும்பிலான செயினும் பொருத்தப்பட்டிருக்கும்.

புதிய தலைமுறை வங்கிகளின் வருகை, கணினியை மையமாக வைத்து செயல்படத் துவங்கிய வங்கி சேவை ஆகியவைகளால் அதிகபட்ச பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்த வங்கி கிளை உள்கட்டமைப்பு (branch interiors) முற்றிலுமாக தகர்த்தெறியப்பட்டு கண்களுக்கு குளுமையான நிறத்தில், குளிர்சாதன வசதிகளுடன் கூடிய மற்றும் அழகிய வடிவமைப்புகளுடன்  அமைக்கப்பட்ட மேலாளர் அறை, வரவேற்பறை, குமாஸ்தா மற்றும் வங்கி அதிகாரிகளுடன் நெருங்கி பேச வசதியாக இரண்டடி உயரத்திற்கும் குறைவான திறந்த கவுன்டர் மேசைகள் (open counters) மற்றும் கண்ணாடிகளால் ஆன தடுப்புகளால் மட்டுமே சூழப்பட்ட காசாளர் அறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கிளைகளின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு அடுக்கு கதவுகள் அகற்றப்பட்டு முழுவதும் கண்ணாடியிலான (glass plate) கதவுகள் அலங்கரிக்க துவங்கின. இன்று எந்த வங்கியிலும் பர்களர் அலாரம் இல்லை என்றே தோன்றுகிறது. (அது இருந்திருந்தால் கீழ்கட்டளை வங்கி கிளையொன்றில் சந்தேகப்படும்படியான நபர்கள் வாடிக்கையாளர்களை சுற்றி வளைத்தபோதே காசாளர் இந்த அலாரத்தை இயக்கியிருந்திருப்பார்.)

இத்தகைய வசதிகள் புதிய தலைமுறை வங்கிகளுக்கு தங்களுடைய வர்த்தகத்தை பன்மடங்கு பெருக்க உதவியதைக் கண்ட பொதுத்துறை வங்கிகளும் வேறு வழியின்றி இவற்றிற்கு நிகரான கட்டமைப்பு வசதிகளை அறிமுகப்படுத்தின. இதன் விளைவாக   பொதுத்துறை வங்கிகளுடைய வர்த்தகம் பெருகியதோ இல்லையோ வங்கிக் கிளைகளின் பாதுகாப்பு பெரிதாக பாதிக்கப்பட்டன என்பது உண்மை.  குறிப்பாக சுமார் பத்தடி அளவுக்கு அமைந்துள்ள விசாலமான, கண்ணாடி கதவுகளை மட்டுமே கொண்டுள்ள வாயில்கள் வங்கிக் கொள்ளையர்கள் மிக எளிதாக வெளியேற வசதியாக அமைந்துவிட்டன. அது போலவே வாடிக்கையாளர்களுடைய வசதிக்கென அமைக்கப்பட்டுள்ள குறைந்த உயரமுள்ள கவுன்டர் மேசைகள் வாடிக்கையாளர்களுடைய ரகசியங்களை மற்றவர்களும் எளிதில் தெரிந்துக்கொள்ளக் வகையில் அமைந்துள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. கண்ணாடி தடுப்புகளை மட்டுமே கொண்டுள்ள காசாளர் அறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நோட்டு கற்றைகளையும் அவருடைய அறைக்கு வெளியில் வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எளிதில் காணமுடிகிறது.

ஒருசில தினங்களுக்கு முன்பு என்னுடைய குடியிருப்பிற்கு அருகிலுள்ள ஒரு பொதுத்துறை வங்கிக்கு சென்றிருந்தேன். அங்கு நான் சந்திக்க விரும்பிய அதிகாரி இருக்கையில் இல்லாதிருக்கவே அவருடைய திறந்த கவுன்டர் மேசைக்கு முன்பு இருந்த இருக்கைகள் ஒன்றில் சுமார் ஐந்து நிமிடம் அமர்ந்திருக்க நேர்ந்தது.  அந்த ஒரு சில நிமிடங்களில் அவருடைய மேசையில் விரிந்து கிடந்த வேறொரு வாடிக்கையாளருடைய கணக்கு விவரங்கள் அடங்கிய கணினி அறிக்கையை (computer print out) என்னால் எளிதில் வாசிக்க முடிந்தது. அதற்கருகில் பல வாடிக்கையாளர்களால் தங்களுடைய கணக்குகளில் செலுத்தப்பட்ட காசோலைகள் ஒரு க்ளிப்பில்.... அந்த அதிகாரியின் இருக்கைக்கு இடமும், வலமும் இருந்த இருக்கைகளும் காலியாக இருந்தன. அந்த சில நிமிடங்களில் அங்கு கேட்பாரற்று கிடந்த காசோலைகளை யார் வேண்டுமானாலும் எடுத்து சென்றிருக்க முடியும்.

வாடிக்கையாளர்களுடைய வசதிகளை பெருக்குவதில் மட்டுமே முனைப்பாயிருக்கும் வங்கிகள் தங்களுடைய வங்கி பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை சமீபத்தில் ஒரே மாதத்தில் சென்னையில் நடந்துள்ள ஒரே மாதிரியான இரு வேறு வங்கிக் கொள்ளைகள் மீண்டும் உணர்த்தியுள்ளன. பெரும் பொருட்செலவில் உள்கட்டமைப்புகளை (interior) செய்ய தயங்காத வங்கிகள் காவல்துறை பலமுறை பரிந்துரைத்த கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்ற மறுக்கின்றன. பல ஆயிரம் கோடி முதலீட்டில் தங்களுடைய அனைத்து கிளைகளும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டன என்பதை பெருமையுடன் பறைசாற்றும் அதே வங்கிகள் கிளை ஒன்றிக்கு சில ஆயிரங்கள் மட்டுமே தேவைப்படும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தயங்குவது வேடிக்கைதான்.

இத்தகைய பிடிவாத போக்கிற்கு மிக முக்கிய காரணம் மேலாண்மை திறனற்ற அதிகாரிகள் வங்கிகளின் மேலிடத்தில் அமர்ந்திருப்பதுதான். இன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான வங்கித் துறையில் இன்றைய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்த  மறுக்கும் அல்லது தயங்கும் உயர் அதிகாரிகளை பொதுத்துறை வங்கிகளிலிருந்து தயவு தாட்சண்யம் பாராமல் நீக்கிவிட்டு இளம் அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு முன்வரவேண்டும். வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பிலுள்ள மத்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுடைய பாதுகாப்பு வசதிகளையும் முறைபடுத்த வேண்டியது அவசியம். வங்கிக் கிளைகளுக்கு உரிமம் வழங்கும் நேரத்தில் ஒரு கிளைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கிளை திறக்கப்படும் தினம் முதலே அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கிளை அமைந்துள்ள பகுதியில் செயல்படும் வட்டார காவல்துறை ஆய்வாளரின் (Inspector of Police) சான்றிதழையும் (security certificate) பெற்று அதை கிளை திறப்பதற்கான ரிசர்வ் வங்கியின் உரிமத்துடன் கிளை அலுவலகத்தில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்க வேண்டும்.

ஆனால் இத்தகைய பாதுகாப்பு வசதிகள் மட்டுமே வங்கிக் கொள்ளைகளை தடுத்துவிட முடியுமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக மாற்றியமைக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகளை அறிமுகப்படுத்தும் வங்கிகள் அத்துடன் அவை வங்கி பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் குந்தகம் விளைவித்து விடாமல் இருக்க தன்னுடைய பணியாளர்கள் செயலாற்றும் முறைகளிலும் சில விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது அவசியம்.  வங்கியின் விதிமுறைகளை தங்களுடைய வசதிக்கேற்ப மீறும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அவர்களுடைய விதிமீறல்களால் வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்படும் இழப்புக்கு பொறுப்பாக்கி தண்டிக்கவும் தயங்கக் கூடாது.

குறிப்பாக, காசாளர் தன்னுடைய சொந்த பொறுப்பில் கவுன்டரில் வைத்திருக்கக் கூடிய தொகையை (cash on counter) மிகக் குறை ந்த அளவில் (bare minimum) நிர்ணயிக்க வேண்டும்.  இன்றைய கணினி யுகத்தில் பத்து, பதினைந்து லட்சம் ரொக்கத்தை கணக்கிலிருந்து எடுக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆகவே எந்த ஒரு கிளையும் (பெரு நகரங்களில் (metro cities) இயங்கும் ஒரு சில மிகப் பெரிய கிளைகளை (extra large branches) தவிர)  இத்தகைய பெருந்தொகையை காசாளர் வசம் விட்டு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இன்றைய கணினி யுகத்தில் பல வங்கி கிளைகளின் மொத்த பரப்பளவும் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் சதுர அடிகள்தான் என்பதால் எப்போதாவது வரும் வாடிக்கையாளரின் பெரிய ரொக்க தேவைக்கு கிளையின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து (cash safe) எடுத்து கொடுப்பது எளிது. இப்போதும் பெரும்பாலான வங்கிகளின் கவுண்டர் ரொக்க அளவு இரண்டிலிருந்து மூன்று லட்சம்தான் இருக்கக் கூடும் என்று கருதுகிறேன். ஆனாலும் அடிக்கடி பாதுகாப்பு  பெட்டக அறைக்கு சென்று வர வேண்டும் என்பதற்காக இந்த அளவையும் கடந்து காசாளர்கள் தங்கள்வசம் ரொக்கத்தை வைத்திருப்பது வழக்கம்.

சமீபத்தில் நடந்த இரு கொள்ளைகளுமே சென்னை புறநகரில் அமைந்துள்ள சிறிய கிளைகளில்தான் என்பதால் இவற்றின் cash-on-counter limit பதினைந்து லட்சமாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே இவ்விரு கொள்ளைகளுக்குமே கிளை விதிகளை மீறிய அதிகாரிகள் மற்றும் காசாளரை பொறுப்பாக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அப்போதுதான் இதுபோன்ற விதி மீறல்களில் வங்கி பணியாளர்கள் இனி ஈடுபடமாட்டார்கள்.


***********

பி.கு.: பிடிபட்ட கொள்ளையர்களை தற்காப்பு என்ற பெயரில் காவல்துறை சுட்டுக்கொன்றுவிட்டதைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் எழுதப்பட்டுவிட்டன. இப்படிச் செய்தால்தான் மற்ற கொள்ளையர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டார்கள் என்ற ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளதையும் காண முடிந்தது. ஆனால் இதே போன்ற ஒரு சூழல் காவல்துறையின் அத்துமீறலால் நடந்ததை பல முறை நாம் கண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு குற்றத்திற்கும் இன்னின்ன பிரிவுகளின்படி இன்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை இந்திய குற்றவியல் மற்றும் இந்திய தண்டனைச் சட்டங்கள் கூறுகின்றன. அத்தகைய சட்டங்களை செயல்படுத்த வேண்டிய காவல்துறையே தற்காப்பு என்ற போர்வையில் நடத்தி முடிக்கும் என்கவுன்டர் கொலைகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போவது நாட்டில் நடப்பது ஜனநாயகம்தானா என்ற கேட்க தூண்டுகிறது.

இந்த பதிவை நான் எழுதி முடித்து நான்கைந்து நாட்கள் ஆகிவிட்டன. என்னுடைய இணைப்பு (internet connection) சரிவர இயங்காததால் பதிவை அப்லோட் செய்ய முடியாமல் போய்விட்டது.

4 comments:

Paramasivam said...

தங்களது சென்ற வருட பதிப்பை இப்போது தான் படித்தேன். நானும் வங்கி அதிகாரியாக இருந்து ரிடையர் ஆனதால் மிகவும் ஒன்றி விட்டேன்.
இனி தங்களின் மற்ற பதிவுகளை படிக்க எண்ணி உள்ளேன். நன்றி.
N.Paramasivam

Paramasivam said...

நடந்த இரு கொள்ளைகளுமே சென்னை புறநகரில் அமைந்துள்ள சிறிய கிளைகளில்தான் என்பதால் இவற்றின் cash-on-counter limit பதினைந்து லட்சமாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே இவ்விரு கொள்ளைகளுக்குமே கிளை விதிகளை மீறிய அதிகாரிகள் மற்றும் காசாளரை பொறுப்பாக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

அதிகாரிகள் எந்த வகையில் பொறுப்பு என தெரிய வில்லை. அதிகப்பட்ட பணத்தை உள்ளே உடனுக்குடன் வைக்க சொம்பெரிதனப்பட்ட காசாளர் தான் பொறுப்பு என எண்ணுகிறேன்.
N.Paramasivam

TBR. JOSPEH said...

வாங்க பரமசிவம் சார். இந்த ப்ளாக ஆரம்பிச்சதே வங்கிகள்ல நடக்கற விஷயங்கள வெளியில இருக்கறவங்களுக்கு புரியற மாதிரி எழுதணும்னுதான். ஆனா கொஞ்ச நாளைக்கப்புறம் பெருசா வரவேற்பு கிடைக்கல. அதனால நிறுத்தி வச்சிருந்தேன். மறுபடியும் தொடர்ந்து எழுதணும்னு ஆசைதான். பார்ப்போம்.

TBR. JOSPEH said...

அதிகாரிகள் எந்த வகையில் பொறுப்பு என தெரிய வில்லை. அதிகப்பட்ட பணத்தை உள்ளே உடனுக்குடன் வைக்க சொம்பெரிதனப்பட்ட காசாளர் தான் பொறுப்பு என எண்ணுகிறேன்.//

ஒரு வங்கி கிளையில் என்ன நடந்தாலும் அதற்கு சம்மந்தப்பட்ட இலாக்கா அதிகாரிதானே பொறுப்பு? காசளரிடம் எவ்வளவு அதிகப்படியான பணம் எவ்வளவு உள்ளது என்பதை அவ்வப்போது கன்காணிப்பதும் cash officerருடைய கடமை அல்லவா? அப்படி நினைத்துத்தான் எழுதினேன். ஆனால் ஒவ்வொரு வங்கியிலும் வெவ்வேறு நியது உள்ளது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.

Post a Comment