Tuesday, September 21, 2010

வங்கியுலகம் - காசோலைகள்- வங்கியின் கடமைகள் - 2

3. காசோலை குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தற்போது நடைமுறையிலுள்ள சட்டப்படி வங்கி காசோலைகள் அதில் எழுதப்பட்டிருக்கும் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆகவே அந்த காலக்கெடுவிற்குப் பிறகு பெறப்படும் காசோலைகளை பட்டுவாடா செய்யும் கடமை வங்கிகளுக்கு இல்லை. கவனக்குறைவாக இத்தகைய காசோலைகளை பட்டுவாடா செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு ஏற்படக்கூடிய இழப்புக்கும் வங்கிகள் பொறுப்பாகக் கூடும்.

4. வாடிக்கையாளருடைய கணக்குகள் நிறுத்தப்பட்டிருக்கலாகாது.

சில சமயங்களில் ஒரு வாடிக்கையாளருடைய கணக்கு சில காரணங்களால் நிறுத்தப்படக் கூடும் (Blocked or Stopped from further operations). இது இருவகைப்படும்.

4.1. முழுவதுமாக நிறுத்தப்படுதல் (Operations Stopped).

கணக்கில் வரவு-செலவு எதையுமே வாடிக்கையாளரால் செய்ய முடியாது.

4.2 குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் நிறுத்தப்படுதல் (Partially Stopped)

வரவு அனுமதிக்கப்படும். கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்படாது.

எந்த காரணங்களுக்காக இத்தகைய தடைகள் விதிக்கப்படுகின்றன?

1. வாடிக்கையாளருக்கு எதிராக அரசாங்க இலாக்காக்களிலிருந்து ஏதேனும் தாக்கீது (Notice) வருவதுண்டு. சாதாரணமாக இத்தகைய தாக்கீது அவர் செலுத்தக்கூடிய வருமான அல்லது விற்பனை வரி நிலுவையில் நிற்கும் சூழலில் சம்பந்தப்பட்ட இலாக்காக்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது நீதிமன்றங்கள் வழியாகவோ பெறப்படுகின்றது. தாக்கீதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை காட்டிலும் வாடிக்கையாளருடைய கணக்கில் கூடுதலாக தொகை நிலுவையில் நிற்கும்பட்சத்தில் தாக்கீதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை அவர் எடுத்துவிட அனுமதிக்கப்படமாட்டார். மீதமுள்ள தொகையை அவர் பட்டுவாடா செய்ய அனுமதிக்கப்படுவார். மாறாக கணக்கில் குறைவாக இருக்கும்பட்சத்தில் அவர் கணக்கில் பணம் செலுத்த அனுமதிக்கப்படுவார்.

2. வாடிக்கையாளர் மீது தொடுக்கப்படும் வழக்குகளில் அவருக்கு எதிராக வசூல் தாக்கீது (Garnishee Order) சம்பந்தப்பட்ட நீதிமன்றம் வழங்குவதுண்டு. இத்தகைய சூழலிலும் மேற்கூறிய வகையில் கணக்கு முடக்கிவைக்கப்படுகிறது. (இது ஒரு மிக முக்கியமான நிபந்தனையாகும். இதை முழுவதுமாக விவரிக்காமல் இப்போது விடுகிறேன். பிறகு அவசியம் நேரும்போது விவரிக்கிறேன்)

3. வாடிக்கையாளரின் வர்த்தகம் அல்லது செயல்பாடு அரசின் கொள்கைகளுக்கோ (Policy) சட்டங்களுக்கோ (Laws in force) எதிராக இருக்கும்பட்சத்தில் அவருடைய மொத்த கணக்குமே முடக்கப்பட்டுவிடும்.

4. சில சமயங்களில் வங்கிக்கு வரவேண்டிய கடன் நிலுவைகளுக்கும் கூட சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கணக்கு முடக்கப்படுவதுண்டு. உதாரணத்திற்கு வாடிக்கையாளர் அதே வங்கி கிளையிலிருந்தோ அல்லது அந்த வங்கியின் மற்றொரு கிளையிலிருந்து பெற்ற கடனை முழுவதுமாக அடைக்க தவறியிருந்தால் அதை வசூலிக்கும் முகமாகவும் அவருடைய கணக்கு முடக்கப்பட்டுவிடும்.

ஆனால் இத்தகைய சூழலில் எதற்காக வாடிக்கையாளருடைய கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்பதை அவருக்கு தெரிவிக்க வேண்டியது வங்கியின் கடமைகளுள் ஒன்று.

தொடரும்..

2 comments:

பாலராஜன்கீதா said...

//வங்கி காசோலைகள் அது வழங்கப்பட்ட தியதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.//
டி பி ஆர் அய்யா,
வங்கிக்காசோலை ***அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்*** என்பதைவிட ***அதில் எழுதப்பட்டிருக்கும் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் பணம் கொடுக்கவேண்டிய வங்கி(யின் கிளை)க்குச் சமர்பிக்கப்படவேண்டும்*** என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

TBR. JOSPEH said...

வாங்க பால்ராஜ்,

அதில் எழுதப்பட்டிருக்கும் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் //

மாற்றிவிட்டேன். 'From the date of issue' என்பதைத்தான் 'வழங்கப்பட்ட தியதியிலிருந்து' என்று குறிப்பிட்டிருந்தேன்.

Post a Comment