வங்கி என்றால் என்ன அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
இந்திய வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின்படி (Banking Regulation Act) வங்கி என்பது பொதுமக்களிடமிருந்து அவர்களுடைய சேமிப்பை திரட்டி அதை தேவையுள்ளவர்களுக்கு கடனாக வழங்கவோ அல்லது முதலீடு செய்யவோ நிறுவப்பட்ட ஒரு நிறுவனம்.
அதாவது
1. அது தனிநபராகவோ,(Individual) ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூட்டு சேர்ந்து அமைக்கும் சில கூட்டாளிகளை மட்டுமே கொண்ட அமைப்பாகவோ (Parnership) அல்லது தொண்டு நிறுவனமாகவோ (Charitable Trust) இருத்தல் ஆகாது. நம் நாட்டைப் பொருத்தவரை ஒரு பொது நிறுவனமாக மட்டுமே (Public Limited Company) இருக்க வேண்டும்.
2. அதன் முதன்மை செயல்பாடுகள் (Functions) அல்லது சேவை (Service) பொது மக்களின் சேவையை திரட்டுவதாக (Mobilisation of savings from Public) இருக்க வேண்டும்.
3. திரட்டிய சேமிப்பை தேவைப்படுவோருக்கு (அது தனிநபராகவோ, நிறுவனமாகவோ இருக்கலாம்) கடனாக வழங்க வேண்டும் அல்லது லாப நோக்கத்துடன் முதலீடு செய்ய வேண்டும்.
இந்த மூன்று அம்சங்களையும் பெற்றிருக்கும் நிறுவனம் மட்டுமே வங்கி என்று அழைக்கப்படுகிறது.
சுருக்கமாக கூறினால். பொதுமக்களின் சேமிப்பை முதலீடாக மாற்றும் ஒரு இடைநிறுவனம் (Intermediary) என கூறலாம்.
பொருளாதார சித்தாந்தங்களின்படி ஒரு நாட்டின் தனிநபர் ஒவ்வொருவரிடமுமுள்ள சேமிப்பு ஒரு நாட்டின் முதலீடாகாது. அவை தேவைப்படும் தொழில் மற்றும் வணிகத்தில் முதலீடு செய்யும்போது மட்டுமே அவை முதலீடாக மாறுகிறது. இந்த மிக முக்கியமான அலுவலை செய்வதுதான் வங்கிகளின் பிரதான அலுவல். ஆகவே ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சேமிப்பையும் திரட்டி நாட்டின் முதலீட்டாக மாற்ற அந்த நாட்டின் வங்கித்துறை மிகவும் கவனத்துடனும், சிறப்பாகவும் செயல்பட வேண்டும்.
சேமிப்பு என்றால் என்ன?
இதற்கு பலவகை பொருளாதார விளக்கங்கள் உள்ளன.
1. உதிரி வருமானம்: வருமானம் - செலவுகள் = உதிரி அல்லது கூடுதல் வருமானம்.
அதாவது ஒருவருடைய வருமானத்திலிருந்து அவருடைய செலவினங்களுக்கு தேவையான தொகையை செலவிட்டபிறகு மீதமுள்ள தொகையே சேமிப்பு எனப்படுகிறது.
2. முதலீடு (Investment) செய்யப்படும் வருமானம்
அதாவது ஒருவருடைய வருமானத்திலிருந்து லாப நோக்கத்துடன் ஒரு திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை. முந்தைய விளக்கத்திலிருந்து இது முற்றிலுமாக மாறுபடாவிட்டாலும் ஒருவருடைய உதிரி வருமானம் மட்டுமே அவருடைய சேமிப்பாகிவிடாது, மாறாக அது ஒரு லாபம் ஈட்டும் நோக்கத்துடன் ஏதாவது ஒரு திட்டத்திலோ அல்லது தொழிலிலோ அல்லது வணிகத்திலோ முதலீடு செய்யப்பட வேண்டும் என்கிறது. ஏனெனில் ஒருவருடைய உதிரி வருமானம் முதலீடு செய்யப்படாதவரை வேறு எதற்காகவாவது செலவிடப்பட வாய்ப்புள்ளது அல்லவா?
ஏன் சேமிப்பு தேவைப்படுகிறது அல்லது ஏன் மக்கள் சேமிக்கின்றனர்?
இதற்கு பிரபல பொருளாதார விஞ்ஞானி ஜே.எம் கெய்ன்ஸ் பலவகை காரணங்களை பட்டியலிடுகிறார்.
1. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத பிரச்சினைகளை (contigencies) எதிர்கொள்ள,
2. தங்களுடைய முதிய வயதில் ஏற்படக்கூடிய மருத்துவ மற்றும் அப்போதைய வாழ்க்கை தேவைகளுக்காக,
3. தங்களுடைய குழந்தைகளை நல்லபடி வளர்த்து ஆளாக்க,
4. வட்டி ஈட்டுவதற்காக,
5. பிற்காலத்தில் சொத்து வாங்க,
6. தங்களுடைய முதிய வயதிலும் பொருளாதார சுதந்திரத்துடன் வாழ,
7. லாபகரமான தொழில் அல்லது வணிகத்தில் முதலீடு செய்ய அல்லது
8. தங்களுடைய வாரிசுகளுக்கு விட்டுச் செல்வதற்கு
ஆக, ஒரு தனிநபரின் வாழ்க்கைக்கு சேமிப்பு மிக, மிக அவசியம் என்பது தெளிவாகிறது. ஒரு தனிநபருக்கே இப்படியென்றால் ஒரு நாட்டிற்கு?
ஒரு நாட்டிலுள்ள ஒட்டுமொத்த தனிநபர் மற்றும் நிறுவனங்களின் ஒட்டுமொத்த சேமிப்பே அந்த நாட்டின் ஒட்டுமொத்த சேமிப்பாகிறது (Gross Domestic Savings).
இவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டி நாட்டின் தேவைகளை பூர்த்திசெய்ய அவற்றை அந்த நாட்டின் ஒட்டுமொத்த முதலீட்டாக மாற்ற உதவுவதே வங்கிகளின் தலையாய பணி.
தொடரும்..