குஜராத்தைச் சார்ந்த வைர வியாபாரி நிராவ் மோடி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் (இதில் அரசியல்வாதிகளுக்கு எந்த அளவுக்கு தொடர்பு இருந்தது என்பது இனிமேல்தான் தெரியும்!) இணைந்து செய்த கூட்டு களவாணித்தனத்தால் வங்கிக்கு மட்டுமல்ல நாட்டுக்கே சுமார் ரூ.11,000/- கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.
இந்த களவாணித்தனம் எப்படி நடந்தது? இதை ஏன் சுமார் ஏழு வருடங்களாக யாராலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை?
இது தொடர்பாக ஊடங்களில் வெளிவந்துள்ள செய்திகள் அனைத்துமே ஊகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவைதான். இவ்வளவு பெரிய முறைகேடு கணிணி மயமாக்கப்பட்ட சூழலில் எவ்வாறு சாத்தியமானது என்பதெல்லாம் இதில் தொடர்புடைய வங்கி அதிகாரிகளே முன்வந்து தெளிவுபடுத்தினால்தான் தெரியவரும்.
நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியிலேயே இத்தகைய முறைகேட்டை ஒருசில அதிகாரிகள் இணைந்து செயல்படுத்த முடியுமென்றால் இத்தகைய முறைகேடு இன்னும் எத்தனை வங்கிகளில் நடைமுறையில் உள்ளதோ, அந்த இறைவனுக்கே வெளிச்சம். இந்த முறைகேடு கடந்த சுமார் ஏழு வருடங்களாக எந்த ஒரு ஆய்வாளர் கண்களிலும் தென்படாமல் இருந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது. சாதாரமான பெரிய வங்கிக் கிளைகளில் அன்றாடம் நடைபெறும் வங்கி பரவர்த்தனைகள் அனைத்தும் கன்கரண்ட் ஆடிட்டர் (concurrent auditors) என்பவர்களால் அன்றாடம் தணிக்கை செய்யப்படுவது வழக்கம். அத்துடன் வருட இறுதியில் கிளையின் நிதியறிக்கையை ஆய்வு செய்யும் தணிக்கையாளர்கள் (Statutory Auditors), வங்கி ஆய்வாளர்கள் (Internal Inspectors) நடத்தும் தணிக்கை வேறு!
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் 2017-18ல்தான் பஞ்சாப் நேஷனல் வங்கி சிறந்த ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்த வங்கி என்ற விருது வேறு பெற்றுள்ளது!
இந்த முறைகேட்டில் என்னதான் நடந்தது என்று உங்களுக்குள்ள அனுபவத்தில் தமிழில் எழுதுங்களேன் என்று என்னுடைய முகநூல் நண்பர் ஒருவர் சிலதினங்களுக்கு முன்பு என்னுடைய பதிவு ஒன்றில் கமெண்ட் செய்திருந்தார்.
அதன் விளைவுதான் இந்த பதிவு. சற்று நீளமாக இருக்கும் என்பதால் இரண்டு அல்லது மூன்று தினங்கள் தொடரும். முடிந்தவரையில் எளிமையாக சொல்வதற்கு முயன்றுள்ளேன்.
இந்த முறைகேட்டின் அடிப்படை குறிப்பிட்ட வங்கி நிராவ் மோடி சார்பாக வெளிநாட்டு வங்கிகளுக்கு அளித்த கடன் கடிதம் (Letter of Credit) அல்லது ஜாமீன் கடிதம் (Letter of Undertaking - LOU) என்று கூறுகிறார்கள். இது எல்லா வங்கிகளாலும் அதன் இறக்குமதியாளர்கள் சார்பாக வழங்கப்படும் ஒன்றுதான். ஏனெனில் இந்திய வங்கிகள் தங்களுடைய இறக்குமதியாளர்கள் சார்பாக அவர்கள் இறக்குமதி செய்யும் பொருட்களை விற்கும் வெளிநாட்டு நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு நீங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு உண்டான தொகைக்கு நாங்கள் பொறுப்பு என்றால்தான் ஏற்றுமதியாளர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் பொருட்களை ஏற்றுமதி செய்வார்கள். இந்திய வங்கிகளின் இத்தகைய கடிதங்கள் ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய வங்கிகளிடம் சமர்ப்பித்து ஏற்றுமதி செய்ய தேவையான பொருட்களை தயாரிக்க அல்லது சேகரிக்க கடன் பெற்றுக்கொள்ளவும் உதவுகின்றன.
ஆனால் இத்தகைய கடிதங்களில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையைப் பெற சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர் செய்ய வேண்டியது என்னென்ன என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட பொருட்களின் அளவு, தரம் மட்டுமல்லாமல் அவை எவ்வாறு பொதியப்பட்டிருக்க வேண்டும் (Pack), அது எவ்வாறு காப்பீடு (Insure) செய்யப்பட்டிருக்க வேண்டும், எவ்வாறு அனுப்பப்பட வேண்டும் - விமானத்திலோ அல்லது கப்பலிலோ - என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும். கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் ஏற்றுமதியாளர் செய்ய வேண்டியதை அவருடைய வங்கி உறுதிசெய்வதோடு கடிதம் காலாவதியாவதற்கு முன்பாகவே இந்திய வங்கியில் இறக்குமதிக்கு தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் வந்தடைய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதுவரை இந்திய வங்கி தொகையை செலுத்த தேவையில்லை. ஆனால் இந்த முறைகேட்டில் தொடர்புடையை கடிதங்களில் இத்தகைய ஷரத்துகள் (Conditions) இருந்தனவா என்பது தெரியவில்லை.
மேலும் சாதாரணமாக இந்தியாவில் வங்கியில் எவ்வித கடன் ஏற்பாடுகளும் (Credit arrangements) இல்லாத சூழலில் ஒருவர் இத்தகைய கடிதம் பெற அதன் மொத்த மதிப்பையும் வங்கியில் வைப்பு நிதியாக (Fixed Deposit) செலுத்த வங்கிகள் நிர்பந்திப்பது வழக்கம். ஆனால் வைர வியாபாரத்தில் வங்கியில் எத்தகைய கடன் ஏற்பாடும் இல்லாமல் இத்தகைய கடிதம் கோரப்படுவது மிக மிக அபூர்வம். ஏனெனில் வைர ஏற்றுமதி-இறக்குமதி என்றால் அது கோடிக்கணக்கில் செய்யப்படும் வணிகம். ஒரு மில்லியன் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களில் அல்லது யூரோவில் கடன் கடிதங்கள் வழங்கப்படுவது சர்வ சாதாரணம். ஆகவே நிராவ் மோடிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் எவ்வித கணக்கும் இல்லாமல் இத்தகைய கடிதம் சுமார் ஏழு வருடங்களாக வழங்கப்பட்டு வந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதுவும் எவ்வித Securityயும் இல்லாமல்!!
இந்த ஊழலில் வங்கியின் உயர் அதிகாரிகள் பார்வையில் படாமல் ஏழு ஆண்டுகள் இருக்க வாய்ப்பே இல்லை என்று ஏன் சொல்கிறேன் என்றால்...
1. இத்தகைய கடிதங்கள் முன்பு போல் டெலக்ஸ் (Telex) மூலம் அல்லாமல் SWIFT வழியாக அனுப்பப்படுகின்றன. SWIFTடை மென்பொருள் என்பதை விட ஒரு messaging medium அல்லது service என்பதுதான் சரியாக இருக்கும். இதன் மூலம் பணத்தை அனுப்ப முடியாது (Fund Transfer). ஆனால் பண பரிவர்த்தனைகள் தொடர்புடைய செய்திகளை அனுப்பலாம். இதில் ஒவ்வொரு வகையான செய்திக்கும் ஒரு code உண்டு. அதை பயன்படுத்தித்தான் செய்திகளை அனுப்ப முடியும். இதில் அனுப்பப்படும் ஒவ்வொரு செய்திக்கும் பின்னால் குறைந்தபட்சம் மூன்று நபர்கள் இருக்க வேண்டும் என்பது நியதி. அதாவது இந்த செய்தியை தயாரிப்பவர் (Maker), சரிபார்ப்பவர் (checker) மற்றும் உறுதிசெய்பவர் (authoriser). இதில் சாதாரணமாக தயாரிப்பவர் அதிகாரியல்லாதவராக இருப்பது வழக்கம். சரிபார்ப்பவர் கடைநிலை அதிகாரியாகவும் உறுதிசெய்பவர் உயர் அதிகாரியாகவும் இருப்பார்கள். இதில் உறுதிசெய்பவரின் மேற்பார்வையில்தான் இந்த செய்தி அனுப்பப்படவேண்டும் என்பதும் நியதி.
2. இத்தகைய கடிதங்கள் SWIFT வழியாக அனுப்பப்பட்டதும் அதை பெற்றுக்கொண்ட வங்கியிலிருந்து நிச்சயம் ஒரு conirmation message வந்துவிடும். அல்லது மேற்கூறப்பட்ட கடிதம் காலாவதியாகும்போதோ அல்லது அதன் அடிப்படையில் ஏற்றுமதியாளருக்கு கடன் வழங்கும்போதோ அல்லது ஏற்றுமதிக்குண்டான ஆவணங்களை சமர்ப்பிக்கும்போதோ நிச்சயம் SWIFT மூலமாகவே தகவல் வந்துவிடும். அதை பெறுபவரும் ஒரே ஆளாக இருக்க வாய்ப்பே இல்லை.
3.ஒவ்வொரு நாளின் இறுதியிலும் அந்த கிளையிலிருந்து அனுப்பப்பட்ட/பெறப்பட்ட SWIFT செய்திகளின் பட்டியல் கிளை அல்லது சம்மந்தப்பட்ட இலாக்கா மேலாளரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆகவே அனுப்பப்பட்ட செய்தி முறைகேடாக அனுப்பப்பட்டிருந்தால் அந்த நாளின் இறுதியிலேயே கண்டுபிடித்திருக்க முடியும்.
4.இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளிலும் CBS எனப்படும் வங்கி பரிவர்த்தனை மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது. இத்துடன் SWIFT மற்றும் அண்ணிய செலவாணி வர்த்தக மென்பொருளும் (Forex software) இணைக்கப்பட்டிருக்க (Integrate) வேண்டும். அத்தகைய சூழலில் அன்றாடம் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கிக் கிளை மேலாளர் பார்வைக்கு செல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் இந்தியாவிலேயே இரண்டாவது வங்கி மற்றும் அதிக அளவில் கணிணிமயமாக்கப்பட்ட வங்கி என்ற பெயர் பெற்றுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் SWIFT இன்னமும் CBS அப்ளிக்கேஷனும் இணைக்கப்படாமல் தனி மென்பொருளாக (stand alone) இயங்கி வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. முறைகேடுகள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
5.இத்தகைய கடிதங்கள் வைர இறக்குமதிக்காக வழங்கப்படும் போது அதிக பட்சம் மூன்று மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஒருவேளை அந்த காலக் கட்டத்திற்குள் வர்த்தகம் இயலாமல் போனால் மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்படலாம். அத்தகைய நீட்டிப்புக்கு கடிதத்தை வழங்கிய கிளை ஒரு புதிய LOU வழங்க வேண்டும். அதையும் வங்கியின் உயர் அதிகாரியின் அனுமதியின்பேரிலேயே வழங்க முடியும்.
4.பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த சில ஆண்டுகளாக நிராவ் மோடியின் நிறுவனங்கள் சார்பாக வழங்கிய கடிதங்களில் சுமார் 280 கடன் கடிதங்களில் இதுவரை திருப்பிச் செலுத்தாமல் போன மொத்த மதிப்புத்தான் இந்த ரூ.11,000/- கோடி என்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது? ஒரு முறை இத்தகைய பரிவர்த்தனையில் வழங்கப்பட்ட கடிதத் தொகையை காலாவதியாவதற்கு பின்பும் வாடிக்கையாளரால் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் மீண்டும் அத்தகையவருக்கு முழு தொகையும் முன்பணமாக பெறாமல் கடன் கடிதங்கள் வழங்கலாகாது என்ற நியதி உண்டே? (சமீபத்தில் நிராவ் மோடி வங்கிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தங்களுடைய நிறுவனங்கள் இதுவரை அளிக்கப்பட்ட பல கடிதங்களுக்குண்டான தொகையை சரியான நேரத்தில் செலுத்தியிருப்பதாகவும் தங்களுடனான வர்த்தகத்தின் மூலம் வங்கி பல கோடி கமிஷன் தொகையாக ஈட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதை பார்க்கும்போது இதே வங்கி கிளை மூலமாக பல ஆயிரம் கோடி அளவுக்கு கடன் கடிதங்கள்/ஜாமீன் கடிதங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதில் 280 கடிதங்கள் மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் தெரிகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை வங்கி அவருக்கு அளித்த விளத்தை வெளியிட்டால்தான் தெரியும்)
இத்தகைய நியதிகள் இருந்தும் இத்தகைய முறைகேடு நடந்துள்ளது என்றால் அது தற்போது கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை.
இதை மேலும் ஆராய்ந்தால்...
வைர நகைகளை தயாரித்து உலகெங்கும் விற்பனை செய்வதில் நிராவ் மோடி நிறுவனங்கள் பெயர்பெற்றவை. இவர்கள் நகை தயாரிப்புக்கு தேவையான வெட்டப்படாத (Uncut) மற்றும் தீட்டப்படாத (Unpolished) வைரக் கற்கள், செயற்கை முத்துக்கள் (Cultured or artificial Pearls) ஆகியவற்றை இறக்குமதி செய்து பிறகு அவற்றை விலையுயர்ந்த நகைகளாக வடிவமைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பவர்கள். அதில் அவர் மட்டுமல்லாமல் அவருடைய குடும்பமே ஈடுபட்டிருந்தது. சென்னை உட்பட பல இந்திய பெரு நகரங்களில் அவருக்கு கடைகள் உள்ளன. அவருடைய நகைகளை அணிந்து விளம்பரம் செய்ய பிரியங்கா சோப்ரா போன்ற பிரபலங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததும் அனைவருக்கும் தெரியும். அவருடைய நிறுவனங்கள் வடிவமைத்த வைர, முத்து ஆபரணங்கள் லண்டன் சோத்பி போன்ற பல பிரபல நிறுவனங்களால் காட்சிப் படுத்தவும் ஏலத்தில் விற்கப்படவும் தகுதியுள்ளவையாக கருதப்பட்டுள்ளன. ஆக அவர் ஏதோ முறைகேடுகளில் மட்டுமே ஈடுபடும் மனிதர் அல்ல என்பதும் தெரிகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் வைர வர்த்தகம் நலிவடைந்து வருகிறதாம்! அப்படியே வர்த்தகம் நடந்தாலும் அதில் அவ்வளவாக இலாபம் கிட்டுவதில்லை என்கிறார்கள். இருப்பினும் காலம் காலமாக இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிராவ் மோடி போன்றவர்களால் இதிலிருந்து வெளியில் வர முடிவதில்லை. ஏற்கனவே கொள்முதல் செய்து வைத்திருக்கும் வைரக் கற்களை ஆபரணங்களாகவோ அல்லது தனி வைரக்கற்களாகவோ விற்க முடியாத சூழலில் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டால் என்ன என்று தோன்றியிருக்கலாம். அதற்கு துணை போக வங்கி அதிகாரிகள் இருக்கவே எவ்வித இடையூறும் இல்லாமல் வர்த்தகம் தொடர்ந்திருக்கிறது.
இதில் இன்னொரு ரகசியமும் உள்ளது. வைர வர்த்தகத்தில் ஈடுபடும் குடும்ப உறுப்பினர்களே இந்திய இறக்குமதியாளர்களாவும் வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களாகவும் இருந்துள்ளனர். அதற்கெனவே பல போலி நிறுவனங்களை நிராவ் மோடியும் அவருடைய மாமா மற்றும் உறவினர்கள் ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நிராவ் மோடி சார்பாக வங்கி வழங்கிய கடன் கடிதங்கள் அனைத்துமே வெளிநாட்டிலுள்ள அவருடைய குடும்பத்தினர் நடத்தில் வந்து போலி நிறுவனங்கள் பெயரில்தான் இருந்திருக்க வேண்டும். இவருடைய கடன் கடிதத்தை காட்டி அவர்கள் அந்த நாட்டிலுள்ள இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்றிருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும் பெற்ற கடனை பயன்படுத்தி வைரத்தை ஏறுமதி செய்திருந்தால் இதில் பிரச்சினையே இல்லை. ஆனால் அதுவல்லவே அவர்கள் நோக்கம்! வெளிநாட்டு வங்கிகளில் இருந்து பெற்ற கடனை அங்கேயே முடக்கவோ முதலீடாகவோ செய்திருக்க வேண்டும். கடிதம் காலாவதியாக வேண்டிய நாள் நெருங்கும்போது அதன் மதிப்பு மற்றும் அதற்குண்டான வட்டியையும் சேர்த்து வேறொரு கடிதத்தை பெறுவது அல்லது முதலில் வழங்கிய கடிதத்தின் காலத்தை கூட்டுவது என்று தொடர்ந்திருக்க வேண்டும். இதை ஒரு vicious circle என்பார்கள். இதுபோன்று பல பரிவர்த்தனைகள் நடந்திருக்க வேண்டும். இதில் சம்மந்தப்பட்ட அதிகாரி அந்த கிளையிலோ அல்லது அந்த இலாக்காவிலோ இருந்த வரையிலும் மற்றவர் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரி ஓய்வு பெற்ற பிறகு பொறுப்பேற்ற வங்கி அதிகாரி இந்த முறைகேட்டை தொடர்ந்து செய்ய மறுத்ததன் விளைவாக அதுவரை வழங்கப்பட்டிருந்த அனைத்து கடிதங்களும் அவற்றின் அடிப்படை தேவையான ஏற்றுமதி நடைபெறாத காரணத்தால் அவற்றிற்கு வழங்கப்பட்ட கடன் தொகை முழுவதும் அவற்றை வழங்கிய வங்கியின் (பஞ்சாப் நேஷனல் வங்கி) தலையில் விழுந்துவிட்டது.
இவ்வாறு ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களோ அல்லது நெருங்கிய நண்பர்களோ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்துக்கொண்டு ஏற்றுமதி/இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்படுவது இந்தியாவில் மிக மிக சாதாரணம். இது அனைத்துத் தர வர்த்தகத்திலும் நடைபெறுவதுதான். ஆனால் இது உண்மையான வர்த்தகத்தில் முடிந்தால் யாருக்கும் பிரச்சினை இல்லை. கடன் பெறுவதன் நோக்கம் வர்த்தகம் செய்வதல்லாமல் அயல் நாடுகளில் சொத்து வாங்கி குவிப்பது என்று ஆகும்போதுதான் முறைகேட்டில் முடிகிறது. இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. முடிந்தவரையிலும் கொள்ளையடிப்பதுதான் நோக்கமாக இருக்கும்.
நிராவ் மோடியின் நோக்கமும் அதுவாகத்தான் இருந்திருக்க முடியும். ஆனால் அத்தகையவர் நாட்டின் மிக உயர்ந்த பதவி வகிக்கும் ஒருவர் பங்குகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிகிறது என்கிறபோதுதான் எதிர் கட்சிகளுக்கு அந்த தலைவர் மீதே சந்தேகம் ஏற்படுகிறது.
இதில் இன்னொரு கோணமும் உள்ளது. இந்த முறைகேட்டை சம்மந்தப்பட்ட கிளை மட்டுமல்லாமல் வங்கி உயர் அதிகாரிகளோ கண்டும் காணாதது போல் இருந்திருக்கலாம். ஏனெனில் நிறுவன உரிமையாளரின் பின்னால் இருக்கும் பெயருக்கும் பெரிய தலைவர் ஒருவருக்கும் ஒற்றுமை உள்ளதே. அவருடன் உண்மையில் தொடர்பு இருந்திருக்காவிட்டாலும் அவ்வாறான ஒரு பிரமையை வங்கி அதிகாரிகள் மத்தியில் உருவாக்கியிருக்கலாம். கிடைக்கும் சொற்ப கையூட்டுக்கு மயங்குவதை விட இத்தகைய மிரட்டல்களுக்கு அடிபணியும் வங்கி அதிகாரிகள்தான் மிக அதிகம்!
******